ராமாயணமும்,மகாபாரதமும் இந்து பயங்கரவாதத்தின் சான்று என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய சிங்கை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்துக்களும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதைத்தான் மகாபாரதமும், ராமாயணமும்” வெளிப்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார். சீதாராம் யெச்சூரியின் இந்தக் கருத்துக்கு சிவசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், “எல்லையில் போராடும் ராணுவ வீரர்களின் செயல்கூட வன்முறை என்றுதான் யெச்சூரி கூறுவாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இதிகாசங்களை இழிவுபடுத்தும் சீதாராம் யெச்சூரி தனது பெயரில் உள்ள சீதாராமை நீக்க வேண்டும் என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.