அதிமுகவினரின் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் தந்தையார் ரவி, நேற்று உயர்நீதிமன்றத்தில் ‘தன் மகள் உயிரிழந்ததற்கு தமிழக அரசிடம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மாதம் 12-ஆம் தேதி பள்ளிக்கரணையில் அதிமுகவினர் சாலை விதிகளுக்குப் புறம்பாக வைத்த பேனர் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததால் அவர் நிலைதடுமாறி கீழேவிழ பின்னே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அந்த பேனர் தயாரித்த கடைக்கு சீல் வைக்கப்பட்டதும் பேனர் வைத்த அதிமுகவின் ஜெயகோபால் தலைமறைவாகியதும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இதனையடுத்து பேனர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.
அவரது ஜாமின் மனு மீதான விசாரணை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த சுபஸ்ரீயின் தந்தையார் ரவி நேற்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். தன் மகள் உயிரிழந்ததற்கு தமிழக அரசிடம் ரூபாய் ஒரு கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார்.
இவ்வழக்கு நாளை விசாரிக்கப்படவுள்ளது. இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக தமிழக அரசு உள்ளிட்ட 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெயகோபாலின் ஜாமின் மனு மீதான விசாரணையும், சுபஸ்ரீயின் தந்தை தொடுத்த கோரிக்கை மனு மீதான விசாரணையும் தற்போது உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. நீதிபதி வைத்தியநாதன் இதனை விசாரித்துவருகிறார். விசாரணையின்போது ‘சீன அதிபர் வருகையால் தற்போது சென்னை சுத்தமாகியுள்ளது’ என்று தன் கருத்தையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.