செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்படுவார் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இன்று சட்டமன்ற விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு செம்மொழி தமிழாய்வு நிறுவனம் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புதிய இயக்குநர் விரைவில் நியமிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.
முடங்கிக் கிடக்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்:
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் என்பது ஆட்சிக்குழு, கல்விக்குழு, நிதிக்குழு, உயர்நிலைக்குழு, தலைவர், துணைத் தலைவர், செயலர், அலுவல்சார் உறுப்பினர்களைக் கொண்ட தன்னாட்சி நிறுவனமாகும். இதற்கு தமிழக முதல்வரே தலைவராக செயல்படுவார். மத்திய அரசால் நிறுவப்பட்ட இந்நிறுவனம் 2006 முதல் 2008 வரை மைசூரில் செயல்பட்டுவந்தது; 2008 முதல் சென்னையில் செயல்பட்டுவருகிறது. 2009இல் தமிழ்நாடு சங்கப்பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டது.
மத்தியில் கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த மத்திய நிதி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக முழுநேர இயக்குநர் நியமிக்கப்படவில்லை. திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பதிவாளர் ஏ.பழனிவேல் என்பவரே செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்துவருகிறார். நிறுவனத்தின் இணையதளமும் 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு செயல்பாட்டில் இல்லை. 2015-16ஆம் ஆண்டிற்கு பிறகான ஆண்டறிக்கை, 2015க்குப் பிறகு விருதுபெற்றோர் பட்டியல் என எதுவும் தரவேற்றப்படவில்லை.
இதுபற்றி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியபோது அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் “இன்னும் ஒரு மாதத்திற்குள் புதிய இயக்குநர் நியமிக்கப்படுவார்” என்றார். ஆனால் இன்றளவும் இயக்குநராக புதிதாய் யாரும் நியமிக்கப்படவில்லை. மேலும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தோடு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை இணைக்க மத்திய அரசு முனைந்தபோது எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் அதனை மத்திய அரசு திரும்பப்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.