மதத்தைக் காரணம் காட்டி சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்தவருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நாடு முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில், உபர், ஸ்விகி, சொமட்டோ ஆகிய நிறுவனங்கள் முன்னனியில் இருக்கின்றன. இதில், சொமாட்டோவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். பின்னர் அந்த ஆர்டரையும் அவர் கேன்சல் செய்துள்ளார். பொதுவாக உணவு ஆர்டர் செய்வது, பின்னர் கேன்சல் செய்வது சாதரமாண விஷயம். ஆனால், அந்த நபர் ஆர்டர் கேன்சல் செய்ததற்கான காரணத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது தான் அனைவரிடத்தும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
“இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை நான் கேன்சல் செய்கிறேன். நான் உணவு வழங்குபவரை மாற்றக்கோரினேன். மாற்றவில்லை. என் பணத்தையும் திருப்பித் தரவில்லை. உணவை ஏற்றுக்கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்த முடியாது. எனக்குப் பணம் திரும்ப வேண்டாம். நான் உணவை கேன்சல் செய்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் அந்த நபர்.
அவரது ட்வீட்டை குறிப்பிட்டுப் பதிலளித்த சொமாட்டோ நிறுவனம், ”உணவுக்கு மதம் எதுவும் கிடையாது” எனத் தெரிவித்தது. சொமாட்டோவின் இந்த பதிலுக்குப் பலரும் ஆதரவு கருத்துகளைத் தெரிவித்துவரும் நிலையில், அந்த நபரின் கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் அந்த ட்விட்டை பதிவு செய்த ஜபல்பூரைச் சேர்ந்த அமித் சிங் என்பவருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், மக்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவது குற்றம் என்ற அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஜபல்பூர் காவல் கண்காணிப்பாளர் அமித் சிங், உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு தாசில்தார் முன்பு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.