மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 3 பேர் மீது தொடரப்பட்ட பரிசுப் பொருள் வழக்கில் இருந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
1992ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலிருந்தபோது, அவருடைய பிறந்த நாளுக்கு ஏராளமான பரிசுப் பொருட்களும், காசோலைகளும் வந்தன. முதல்வராக ஆட்சியில் இருக்கும்போது, தங்களுக்கு வரும் பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஆனால், ஜெயலலிதா தம்முடைய பிறந்த நாளுக்கு வந்த பரிசுப் பொருட்களை அரசின் கருவூலத்தில் சேர்க்காமல் தங்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.2 கோடி செலுத்திவிட்டதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது சிபிஐ. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவும், அழகு திருநாவுக்கரசும் இயற்கை எய்தினார்கள். அதன்பின்னர், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அமைச்சர் செங்கோட்டையனை இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.