தேசிய கல்விக்கூடங்களுக்கான தரவரிசை (NIRF) பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தரவரிசை பல்கலைக்கழகம், பொறியியல், கல்லூரி, மேலாண்மை, மருந்தியல், சட்டம், கட்டிடக் கலை, மருத்துவம் மற்றும் ஒட்டுமொத்தமாக ஒன்று என 9 பிரிவுகளில் அமைகின்றது. நாட்டின் உயர்கல்விக் கூடங்களின் தரத்தை அளப்பது தாண்டி, அதன் வழி ஒரு கல்விக்கூடத்தின் தகுதியை வளப்படுத்துவதற்காகத்தான் இந்த தரவரிசைப் பட்டியல். ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும். இந்த பட்டியலின் வழியாக ஒரு சிறந்த கலந்துரையாடலைத் தொடங்கலாம், கடந்த வருடங்களில் வெளியான தரவரிசைப் பட்டியலை ஒப்பிட்டு சில குறிப்பிடத்தகுந்த விஷயங்களைக் கண்டுகொள்ளலாம். இந்த தரவரிசைப் பட்டியல் நம்மிடமிருந்து வேண்டுவதும் இந்த மாதிரியான முயற்சிகளைத்தான். 2019-இன் NIRF தரவரிசைப் பட்டியலில் குறிப்பிடத்தகுந்த அளவு பிராந்திய ஆதிக்கத்தையும், ஏற்றத் தாழ்வையும் காணமுடிகின்றது. இதன்வழி ஒரு மாநிலத்தின் ஆட்சி முறையையும், கொள்கைகளையும் ஆராய முடியும்.
தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 860 கல்வி நிறுவனங்களில் 182 (கிட்டத்தட்ட 21 சதவிகிதம்) கல்வி நிலையங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. ஆறு பெரும் மாநிலங்களான பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தர பிரதேசத்திலிருந்து பட்டியலில் இடம்பெற்றிக்கும் உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கை 127. இதனை ஒப்பிட்டுப் பார்த்தால், கிட்டத்தட்ட தமிழகத்தின் பங்கில் மூன்றில் இரண்டாக இந்த ஆறு மாநிலங்களின் பங்கு இருக்கின்றது. இது ஒட்டுமொத்த பிரிவு, உயர் கல்வியின் முதுகெலும்பாக இருக்கும் கல்லூரிகளின் பிரிவிலும் இதே போக்கைப் பார்க்கலாம். பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 200 கல்லூரிகளில் 74, தமிழகக் கல்லூரிகள். தமிழகத்திற்கு அடுத்தபடியாக கேரளாவிலிருந்து 42 கல்லூரிகள் இடம்பெற்றிருக்கின்றன. கிட்டத்தட்ட பாதிக்கும் அதிகமான நாட்டின் தரமான கல்லூரிகள் இந்த இரு மாநிலங்களில் இருக்கின்றன. கேரளாவை அடுத்து 37 கல்லூரிகளுடன் டெல்லி மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 200 கல்லூரிகளில் பீகார், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், ஒரிசாவைச் சேர்ந்த ஒரு கல்லூரியும் இல்லை. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருந்து வெறும் ஐந்து கல்லூரிகள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
ஆக, சில பெரும் மாநிலங்களின் பங்கிற்கு சமமாக இருக்கிறது தமிழகத்தின் பங்கு! கல்வியில் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்க என்ன காரணம்? தமிழகத்தின் செயல்திறன், பொதுநலக் கொள்கைகள், அரசியலை ஆராயும் போது இரண்டு முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம். முதலாவது அதன் ஜனரஞ்சகவாத பொதுநலக் கொள்கைகள். இதற்கான அடிப்படை மேடையை அமைத்துக் கொடுத்தது 1960-லிருந்து தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சிகள் தான். அந்த ஆட்சி அமைத்துக் கொடுத்த மேடையின் ஸ்திரத்தன்மை கல்விக்கூடங்களின் தரத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
இரண்டாவது இந்த ஜனரஞ்சகவாதத்தின் வடிவம். அது தான் சக்தி வாய்ந்ததாக உயர்ந்து நிற்கிறது. மாநிலத்தின் பொதுநலக் கொள்கைகள் யாவும் ஒரு தனித்த அடையாளத்தைத் தேடும்படித் தூண்டும் ஒரு நுண்ணரசியலை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இருக்கும் அடையாளத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு தான் இந்த ஜனரஞ்சகவாதத்தின் முக்கிய கண்ணியாக இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களும் தான் தமிழகத்தைத் தரம் வாய்ந்த கல்விக்கூடங்களால் நிறைய வைத்திருக்கிறது. இந்த கல்விக் கூடங்களின் வழி தான் ஒடுக்கப்பட்டிருந்த மத்திய, அடித்தட்டு வர்க்க மக்கள் தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கிறார்கள். தொடர்ந்து ஒலிக்கும் இந்த மக்களின் குரல்களும் தேவைகளும் தான் தமிழகத்தை கல்வி உள்ளிட்ட துறைகளில் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் மாநிலமாக மாற்றியிருக்கிறது. தமிழகத்திலிருந்து பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 74 கல்லூரிகளில் 17 (கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு) மட்டுமே சென்னையில் இருக்கும் கல்லூரிகள். மற்ற 57 கல்லூரிகளும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ளன. ஆக, ஒரு முக்கியமான கேள்வி இப்போது எழுகிறது. ஜனரஞ்சகவாதம் தரத்தை மேம்படுத்துமா? நிலையான உயர்கல்வி தரும் தரமான உயர்கல்வி நிலையங்களுடன் தமிழகம் இந்த கேள்விக்கு ஆம் என்ற பதிலைத் தருகிறது.
தமிழில்:நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி.