தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை இருக்கிறது, அதனால்தான் தமிழகத்தில் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று (மே 28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, மோடி என்கிற தனி மனிதனுக்குக் கிடைத்த வெற்றி. இந்திய அரசியலை பொறுத்தவரை, தலைவரை வைத்துதான் தேர்தலில் அந்தந்த கட்சிகளுக்கு அதிக வெற்றி கிடைக்கும்.” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ”நேருவுக்கு பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மக்களை ஈர்க்கும் தலைவர்களாக இருந்தனர். ராஜீவ் காந்தியை காலம் பலி கொடுத்துவிட்டது. அடுத்து வாஜ்பாய். அதற்கு பின் மோடி, மக்களை ஈர்க்கும் தலைவராக இருக்கிறார்.” என்றார்.
”தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவை தவிர மோடிக்கு ஆதரவான அலைகள் வட இந்தியாவில் வீசியது. ஆனால், தமிழகம், கேரளாவில் எதிரான அலை வீசியது. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலைக்கு, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நீட், மற்றும் எதிர்க்கட்சிகள் செய்த பிரசாரம் காரணமாக இருந்தது.” என்று தெரிவித்தார் ரஜினிகாந்த்.
கட்சி ஆரம்பித்த 14 மாதங்களில் தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ள கமலுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார் ரஜினி. மேலும், ”தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் பதவி விலகக் கூடாது.” என்று கூறிய ரஜினி, ”பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. நான் கண்டிப்பாக கலந்துகொள்வேன்.” என்றார்.