தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுடன் மக்களவை தொகுதியில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், மே 19ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் மற்றும் காலியாகவுள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடந்துமுடிந்தது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, சில பகுதிகளில் நடைபெற்ற வன்முறையின் காரணமாக, 10 வாக்குசாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்குத் தமிழகத் தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாஹூ கோரிக்கைவிடுத்திருந்தார்.
இந்தநிலையில், தமிழகம் முழுவதுமுள்ள 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தருமபுரியில் 8 வாக்குச் சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச் சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோட்டில் 1 வாக்குச் சாவடியிலும் மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மே 19ஆம் தேதி இந்த வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு மே 23ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேனி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, 46 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாகத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.