தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் விடுபட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சத்யபிரதா சாஹூ இன்று (ஏப்ரல் 11) செய்தியளர்களை சந்தித்து பேசினார்.
“தமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2,95,94,923 ஆண் வாக்காளர்களும், 3,02,69,45 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மேலும், மூன்றாம் பாலினத்தவர்கள் 5,790 பேர் உள்ளனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 14,10,745 புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையை தவிர ஆதார் அட்டை உள்ளிட்ட 11 அடையாள அட்டையை பயன்படுத்தி தேர்தலில் வாக்களிக்கலாம். நாடாளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்களும், இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 302 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும், 89,160 கட்டுப்பாட்டு இயந்திரமும் பயன்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் உள்ள 67,720 வாக்குச்சாவடி மையங்களில் 7,780 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.127.66 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.127.66 கோடியில், ரூ 62 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.284 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 4185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார் சத்யபிரதா சாஹூ.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் முதல்முறையாக வாக்களிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிகிச்சை பெற்று வரும் 900 பேரில் வாக்களிக்கும் தகுதியுடைய 192 பேரை மருத்துவர்கள் தேர்வு செய்தனர். வாக்காளர் அடையாளஅட்டை மட்டுமின்றி 13ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம் என சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.