தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையங்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி உட்பட தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதில், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, உத்ரகாண்ட், ஜம்மு காஷ்மீர், பீகார், அசாம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி நடந்துமுடிந்தது. இந்நிலையில் தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதியும், புதுச்சேரியில் 1 தொகுதியும் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. வேலூர் மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வேலூரை தவிர 38 மக்களவை தொகுதிகளுக்கு நாளைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதவிர, காலியாகவுள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
நாளைக் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாடு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்திட உதவும், விவிபேட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு எந்திரங்கள், அழியாத மை, கண்காணிப்பு கேமிராக்களுடன் கூடிய, இணையவசதி உள்ள மடிக்கணினிகள் உள்ளிட்ட 101 வகையான பொருட்கள் வாக்குப்பதிவு மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2,95,94,923 ஆண் வாக்காளர்களும், 3,02,69,45 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 5,790 பேர் உள்ளனர். தேர்தல் ரத்தான, வேலூர் தொகுதியில் 18 லட்சத்து 85 ஆயிரத்து 776 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 822 பேரும், இடைத் தேர்தலில் 269 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 67 ஆயிரத்து 720 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி அலுவல் பணி உள்ளிட்ட தேர்தல் பணிகளில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துணை ராணுவப்படையின் 14 ஆயிரத்து 400 பேர், காவல்துறையினர் 63 ஆயிரத்து 951 பேர் உட்பட ஒரு லட்சத்து 53 ஆயிரத்து, 633 பேர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.