தமிழக தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 11) தமிழக தேர்தல் டிஜிபியாக அவர் பொறுப்பேற்றார்.
தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் டி.கே.ராஜேந்திரன். தேர்தல் நடை பெறும் காலங்களில் மட்டும் தேர்தல் பணிகளுக்கென்று தனியாக ஒரு டிஜிபியை தேர்தல் ஆணையம் நியமனம் செய்யும். மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வருகிற 18ஆம் தேதி நடைபெறுவதால், அதைத்தொடர்ந்து தமிழக தேர்தல் பிரிவு டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், சிறைத்துறை டிஜிபியாக இருந்த அசுதோஷ் சுக்லா தேர்தல் டிஜிபியாக மாற்றப்பட்டதையடுத்து தமிழக சிறைத்துறை பொறுப்பு அதிகாரியாக கனகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் டிஜிபியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் அசுதோஷ் சுக்லா. பின்னர் பேசிய அவர், “தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெறும். தேர்தலில் வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க வரவேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.” என்றார்.
மேலும், தேர்தல் முடியும்வரை தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகள் குறித்தும் காவல் அதிகாரிகள் அசுதோஷ் சுக்லாவிடம் தான் அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, தேர்தல் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூம், தேர்தல் பணிகளுக்கான டிஜிபி அசுதோஷ் சுக்லாவும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுனர்.