தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (ஜூலை 18) வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒடியா, அசாமி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும் எனச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. தென்னிந்திய மொழிகளில் கன்னடமும், தெலுங்கும் இடம்பெற்றிருந்த நிலையில், மிகவும் பழமை வாய்ந்த செம்மொழியான தமிழ் மொழி இடம்பெறாதது தமிழர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தமிழ் மொழியிலும் தீர்ப்பு வெளியிட வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியிடப்பட்டன. உச்ச நீதிமன்ற கூடுதல் கட்டடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், முதன்முறையாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (ஜூலை 18) தமிழில் மொழியிலும் வெளியாகியுள்ளது. சரவணபவன் ராஜகோபால் வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.