திமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளராக இன்று (ஆகஸ்ட் 30) நியமிக்கப்பட்டுள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்.
டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராகவும், கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அமமுகவிலிருந்து விலகினார் தமிழ்ச்செல்வன்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன். இவருடன் வி.பி.கலையராஜன் உட்படத் தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்தனர்.
அதைத்தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக கொள்கை பரப்பு செயலாளர்களாக பணியாற்றி வரும் திருச்சி சிவா, ஆ.இராசா ஆகியோருடன் இணைந்து, கட்சி சட்டதிட்ட விதி 26இன்படி திமுக கொள்கைப் பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதேபோல், கட்சி சட்டதிட்ட விதிகளின்படி, திமுக இலக்கிய அணி இணைச் செயலாளராக வி.பி.கலைராஜனும், திமுக நெசவாளர் அணிச் செயலாளராக, கோவை மாவட்டம் குள்ளக்காபாளையத்தை சேர்ந்த கே.எம். நாகராஜனும் நியமிக்கப்படுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.