மத்திய சிறை
சென்னை
28/11/77

அன்புள்ள ஸ்டாலின்,

உனக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி. சாந்தாவுக்கு என் வாழ்த்துக்களைக் கூறவும். 1953ல் திருச்சி சிறையில் ஆறுமாத தண்டனை பெற்று நானிருந்தபோது நீ கைக்குழந்தை! வீட்டிலிருந்து என்னைக் காண வருபவர்களோடு குழந்தையாக இருந்த நீயும் வருவாய். இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு சென்னைச் சிறையில் மிசா கைதியாக (1976) ஓராண்டு நீ இருந்தபோது நான் உன்னைக் காண வந்துகொண்டிருந்தேன். உன்னுடனும் கழக உடன்பிறப்புக்களுடனும் தம்பி மாறன் மிசாக் கைதியாக இருந்தபோது அவனுக்கோர் பெண் பிறந்தது. அந்தக் குழந்தையும் தன் தந்தையைப் பார்க்க சிறைச்சாலைக்குத்தான் வந்துகொண்டிருந்தது. இப்போது உனக்குப் பிறந்திருக்கிற என் பேரனும் என்னைப் பார்க்க சிறைக்கு வருவான் என்று கருதுகிறேன். இந்த அனுபவங்கள் எவ்வளவு இனிமையானவை பார்த்தாயா? இந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல நமதியக்கமாம் பெரிய குடும்பத்தில் எத்தனையோ உடன்பிறப்புகளுக்கு இப்படிப்பட்ட சிறை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.

பொதுவாழ்வு பூங்கா விநோதமல்ல! புயலை எதிர்த்து நிற்பது!

இதைப் புரிந்துகொள்ளாத சிலபேர், இன்னமும் நாட்டிலே இருக்கிறார்கள்.

பாவம்; அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்.

புதிய பேரனுக்கு என் வாழ்த்துக்கள்

அன்புள்ள
மு.கருணாநிதி