திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாகக் கூறிய கே.கே.ரமேஷ் என்பவர், அந்த தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் நேர்மையாக நடைபெறாது என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள். மேலும், நான்கு தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
ஏற்கனவே, அதிமுக பணப்பட்டுவாடா செய்வதாகக் கூறி மதுரையில் மக்களவை தேர்தலை ரத்து செய்யக் கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.