தூய்மை இந்தியா திட்டம் ரத்து செய்த பின்னரும் ரூ.2,100 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை ‘தி வயர்’ பத்திரிக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளது.
ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்துவதற்காக நிதியமைச்சகம் படிப்படியாக மற்ற வரிகளை நீக்கியது. அதன்படி தூய்மை இந்தியா திட்ட வரியானது ஜூலை 1, 2017 அன்று நீக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் ரூ.2,067.18 கோடி வசூலிக்கப்பட்டதாக நிதியமைச்சகத்திடம் இருந்து இந்த தகவல் அறியும் விண்ணப்பம் வழியாகப் பெறப்பட்டது.
ஏப்ரல் 1, 2017 இல் இருந்து மார்ச் 31, 2018 வரை ரூ.4,242.07 தூய்மை இந்தியா திட்ட வரியாக வசூலிக்கப்பட்டது என இயக்குநர் ஜெனரல் அறிவித்தார். இதில் ஏப்ரல் 1 2017 இல் இருந்து ஜூலை 2017 வரை ரூ.2,357.14 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த கணக்கின்படி இந்த வரி நீக்கப்பட்ட ஜூலை 1க்கு பிறகு மார்ச் 31, 2018 வரை ரூ.1,884.93 கோடி வசூலிக்கப்பட்டது.
அதே போல 2018-2019 இல், ஏப்ரல் 1, 2018 முதல் டிசம்பர் 26, 2018 வரை ரூ.182.25 கோடி வசூலிக்கப்பட்டது. ஆக மொத்தம் ரூ.2,067.18 கோடி.
இந்த வரி முதலில் 2015 இல் அமலுக்கு வந்தது. அனைத்து வரிகளுடன் 0.5 % கூடுதல் வரியாக இது வசூலிக்கப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் 2015 முதல் 2018 வரை மொத்தம் 20,632.91 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. 2015-16 நிதியாண்டில், ரூ. 3,901.83 கோடியும், 2016-17 ல் ரூ.12,306.76 கோடி, 2017-18 ல் ரூ 4,242.07 கோடியும், 2018-19 ல் ரூ .182.25 கோடியும் வசூலிக்கப்பட்டது.
இந்த வரி மூலம் கிடைத்த நிதி அனைத்தும் கழிப்பறைகள், தூய்மை வளாகங்கள், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை ஆலைகள் மற்றும் கல்வி, தொடர்பு மற்றும் நிர்வாக செலவுகள் ஆகியவற்றிற்காக செலவிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது.
ராஜ்ய சபாவில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், துணை நிதியமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா, ஜூலை 1, 2017 அன்றோடு தூய்மை இந்தியா திட்ட வரி மற்றும் விவசாய நலன் வரி இரண்டும் ரத்து செய்யப்பட்டன என்று தெரிவித்தார். நிதியமைச்சகத்திடமிருந்து ஜூன் 7, 2017 அன்று வெளியான அறிக்கையொன்றில் ஜி.எஸ்.டி வரி அறிமுகம் காரணமாக இந்த வரிகள் நீக்கப்படுகின்றன என்று தெரிவித்தது.
உண்மையை மறைக்கும் அரசு
‘தி வயர்’ பத்திரிக்கையின் விண்ணப்பத்திற்குப் பதிலளித்த அரசு, இந்த நிதி எந்தெந்த திட்டங்களுக்காக எவ்வளவு செலவழிக்கப்பட்டது என்ற தகவலைக் கூற மறுத்துவிட்டது.
குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம், நிதிகள் எங்குச் செலவிடப்பட்டது என்பது பற்றி வினாவிற்கு, அதற்குரிய பதிலை அளிக்காமல் எவ்வளவு தொகை தொகை ஒதுக்கப்பட்டது மற்றும் செலவிட்டுள்ளது என்பதை மட்டுமே அளித்தது.
சட்டப்படி, தூய்மை இந்தியா திட்ட வரியின் கீழ் சேகரிக்கப்பட்ட பணத்தை முதலில் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதிக்கு (CFI) செலுத்த வேண்டும். CFI இல் இருந்து இந்த பணத்தை ஸ்வாச் பாரத் கோஷிற்குள் செலுத்த வேண்டும் பின் அங்கிருந்து ஸ்வாச் பாரத் அபியான் வழியாக பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளுக்கு அது செலவிடப்படும்.
வரி வசூல் செய்த தொகையின் நான்கில் ஒரு பகுதி இன்னும் எங்களுக்குத் தரப்படவில்லை. அதாவது மொத்தம் 20,600 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு அதில் 16,300 கோடி ரூபாய் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மீதம் ரூ. 4,300 கோடி இன்னும் நிலுவையில் உள்ளது எனச் சுத்திகரிப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இதன்மூலம் இந்தத் தொகை இன்னும் செலவிடப்படவில்லை என்று அறியமுடிகிறது. 2017 இல் வெளியான தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையும் இதை உறுதிப்படுத்துகிறது. சி.ஏ.ஜி யின் அறிக்கையின்படி, ரூபாய் 16,401 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு, அதில் ரூ. 12,400 கோடி மட்டுமே (75% ) தேசியப் பாதுகாப்பு நிதியத்தில் வைக்கப்பட்டு அதுவே செலவிடப்பட்டது.
எஞ்சிய ரூ.4,000 கோடி என்ன ஆனது என்ற கேள்விக்கு இன்னும் பதிலில்லை. இப்படி இந்த அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், வரிகள், செயல்பாடுகள் என எதற்கும் இவர்களிடமிருந்து பதில் வரப்போவதில்லை.