தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற ”நான் குற்றம்சாட்டுகிறேன்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிராகவும் இருந்ததாகக் கூறி ஆயிரம் விளக்கு காவல் துறையினரால் அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம், வைகோவிற்கு ஓராண்டு சிறைதண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்தது கடந்த 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. தீர்ப்பைத் தொடர்ந்து, அபராத பணத்தை செலுத்திய வைகோ, மேல்முறையீட்டுக்குச் செல்ல இருப்பதால், தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் அவசர மனு அளித்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிபதி, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஒரு மாத காலத்திற்கு நிறுத்திவைத்தார். சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ”தேசதுரோக குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் யூகங்களின் அடிப்படையிலேயே தன்னை குற்றவாளி எனத் தீர்மானித்து சட்டத்திற்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.

காவல்துறை சமர்ப்பித்த ஆதாரங்கள் அல்லது சாட்சியங்கள் அடிப்படையிலான தீர்ப்பாக இல்லாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தனிப்பட்ட முடிவாக இந்த தீர்ப்பு இருக்கிறது. பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரத்தின் படி தான் பேசியவற்றை தேசதுரோக குற்றச்சாட்டுடன் தவறாகப் பொருத்தி விளக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

எனது பேச்சு காரணமாக தமிழக மக்களின் மனநிலை ஆவேச நிலையிலிருந்தது என்பதற்கோ, மத்திய – மாநில அரசுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தது என்பதற்கோ எவ்வித ஆதாரங்களையும் காவல்துறை தாக்கல் செய்யவில்லை. எனவே தன் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும். மேல்முறையீடு வழக்கு முடியும் வரை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.