மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்-சின் மகன் ஓ.பி.ரவீந்திரகுமார் தேனியில் நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டதாக ஒரு கோயில் கல்வெட்டில் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கல்வெட்டில் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், குச்சனூரில் உள்ள காசிஸ்ரீ அன்னபூரணி கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகத்தை ஒட்டி கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோயிலுக்கு பேருதவி புரிந்தவர்கள் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இவரது மகன் ஓ.பி.ரவீந்திரகுமாரின் பெயர்களும் இந்த கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.
மக்களவை தேர்தலில் ஆறுகட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஏழாவது கட்ட தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலும் முடிவடையாத நிலையில், தேர்தல் முடிவுகள் வரும் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரவீந்திரகுமார் பெயருடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் எனக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைகள் கிளம்பியதை தொடர்ந்து, அந்த கல்வெட்டில் இருந்து எம்.பி என பொறிக்கப்பட்டிருந்த ரவீந்திரகுமாரின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும் எனத் தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
வரும் 19ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், தமிழகத்தில் காலியாகவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் தேனியில் 2 வாக்குச்சாவடி உட்பட தமிழகம் முழுவதும் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார் களம் காண்கிறார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். கடந்த இரண்டு நாட்களாக கமலின் சர்ச்சையைப் பேச்சு நெட்டிசன்களுக்கு விருந்து அளித்த வந்தன. இந்நிலையில் ஒரு மாற்றம் வராதா என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நெட்டிசன்களுக்கு, இந்த கல்வெட்டு சர்ச்சை நல்ல வேட்டையாக அமைந்துள்ளதாக சமூக வலைதளம் பக்கத்திற்குச் சென்றால் காணமுடிகிறது.