மதவாதத்தின் போதனைகள் தீவிரமாகப் பயிற்றுவிக்கப்படும், திணிக்கப்படும் சூழலில் மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் 25 பேர் மீது கால்நடைகளின் போர்வையில் வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கயிறுகளால் கட்டப்பட்டு, சாலையில் மண்டியிட வைக்கப்பட்டு ‘கோமாதா கி ஜெய்’ என்று தொடர்ந்து கத்த கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அவர்கள் இதே நிலையில் இழுத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் முறையான அனுமதி இன்றி கால்நடைகளை ஓட்டிச் செல்கிறார்கள் என்பது அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. கால்வாவின் காவல் நிலைய அதிகாரி, அந்த 25 நபர்களும் மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்திலிருந்து மஹாராஷ்டிரத்திற்கு அனுமதியின்றி கால்நடைகளை எடுத்துச்செல்ல முயன்றதாகக் கூறியிருக்கிறார். இரு தரப்பினர் மீதும், மோசமான நடத்திய காரணத்திற்காக வழக்குப்பதிவு செய்திருப்பதாகக் காவல் துறையினர் கூறியிருக்கின்றனர்.
எத்தனை வண்டிகளில் கால்நடைகள் எடுத்துச் செல்லப்பட்டன என்பது குறித்து காவல் துறையிடம் தெளிவான பதில்கள் இல்லை. சமீபத்தில்தான் மத்தியப் பிரதேசத்தில் பசுவதை என்ற பெயரில் எய்யப்படும் வன்முறைகளை எதிர்கொள்ள சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட இருந்தது, அதற்குள் இப்படியான மோசமான வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பு, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொல்ல சொல்லி, அஸ்ஸாமில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கும் முன்பு, ஜார்கண்டில் ஒரு முஸ்லிம் இளைஞர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘ஜெய் ஹனுமான்’ என்று சொல்ல சொல்லி கொடூரமாய்த் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். தொடர்ந்து ‘ஜெய்’ கோஷங்களை எழுப்ப சொல்லி சாதாரண மக்களைத் தாக்குவதும் கொள்ளை செய்வதும் என்ன மாதிரியான நிலையை உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும். மதவாதங்களை எதிர்த்து நாம் செயல்பட்டுக்கொண்டே இருப்பது இப்போது அதியவசியமாய் இருக்கிறது.