தேர்தல் பிராச்சாரத்திற்காக ராமநாதப்புரத்தில் தங்கியிருந்த நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
முகவை குமார் என்ற இயற்பெயர் கொண்ட ஜே.கே.ரித்திஷ், 1973 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார். இவரின் பெற்றோர் குழந்தைவேலு மற்றும் ஜெயலட்சுமி ஆவர். இவருக்கு ஷாந்தி மற்றும் மணி என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளார்.
2007 ஆம் ஆண்டு கானல் நீர் என்ற படத்தில் அறிமுகமாகி, நாயகன்(2008), பெண் சிங்கம்(2010), எல்.கே.ஜி(2019) ஆகிய படங்களில் நடித்துள்ளார். நாயகன் படத்தையடுத்து பல படங்கள் ஒப்பந்தமாகினார். ஆனால், எந்தப் படங்களும் முடிக்கப்படவில்லை. இந்நிலையில் எல்.கே.ஜி திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.
இவர் 2009 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி தற்போது அதிமுகவில் கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் 2019 மக்களவை தேர்தலுக்காக அதிமுக சார்பில் ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்த இவர் இன்று(ஏப்ரல்,13) திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.