தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரதமர் மோடி பெயரிலான நமோ டிவிக்கு அனுமதியளித்தது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனக் கடந்த மாதம் 10ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிட்டார் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. இதையடுத்து, அன்று மாலையே நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில், கடந்த 31ஆம் தேதி முதல் நமோ டிவி என்ற பெயரில் 24 மணி நேர ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. இந்த தொலைக்காட்சியின் லோகோவில் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி ஆற்றிய உரைகள், பேரணிகள் என பாஜக சம்பந்தப்பட்ட செய்திகள் இதில் ஒளிபரப்பப்படுகின்றன.
தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும்போது, பிரதமர் மோடி பெயரிலான நமோ டிவிக்கு அனுமதியளித்தது தொடர்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தன. இதுதொடர்பாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம். இதற்குப் பதிலளித்த தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், நமோ டிவி உரிமம் பெற்ற தொலைக்காட்சி அல்ல என்றும், டிடிஎச் விளம்பர தளம் என்றும் கூறியுள்ளது.