கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு நாளை ஒரு முடிவு கிடைக்கும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. காரணம் கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலா அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தவுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 16 அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்திருந்தனர். சபாநாயகர் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்காததால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அதிருப்தி எம்எல்ஏக்கள்.
இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பு வழங்கியது. மேலும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வது அதிருப்தி எம்எல்ஏக்களின் விருப்பம் எனக்கூறிய நீதிபதிகள், அவர்களை இதில் கலந்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்த கூடாது எனவும் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில், கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி கொண்டு வர உள்ளார். தற்போதைய நிலையில் 224 பேர் கொண்ட கர்நாடக பேரவையில் ஆளும் கூட்டணியின் பலம் 117 ஆகவும் பாஜக மற்றும் அதன் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்களின் பலம் 107 ஆகவும் உள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் நாளை நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். ராஜினாமா முடிவில் தாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் பங்கேற்காத சூழலில், அதன் பலம் 102 ஆக குறைந்து விடும். இதனால் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்படும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.