அமேசான் நிறுவனரும் உலகின் பணக்கார மனிதருமான ஜெஃ ப் பெஸோஸ் அவ்வளவு சீக்கிரம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பைக் கூட்டமாட்டார். ஆனால் இரு நாட்களுக்கு முன் அப்படியொரு சந்திப்பில் தன்னுடைய கனவுத் திட்டமான ப்ளூ ஆரிஜான் மற்றும் மற்றும் நிலவில் இறங்கும் விமானமான ப்ளூ மூன் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். “இது ஒரு அற்புதமான வாகனம், இது நம்மை நிலவிற்கு அழைத்துச் செல்லும். நாம் மீண்டும் நிலவிற்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது. ஆனால் இந்தமுறை அங்கேயே தங்கப்போகிறோம்.” என்றார்.
அதற்காக மூட்டை முடிச்சுகளோடு இப்போதே பெஸோஸ் நிலவிற்குச் செல்லப்போகிறார் என்று அர்த்தமல்ல. ஆனால் அதற்கான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. “ப்ளூ ஆரிஜன்” எனும் திட்டம் விண்வெளியில் கட்டுமானங்கள் காட்டுவதாக அமையும். இது விண்வெளிப் பயணம் செல்லவேண்டும் என ஆர்வத்துடன் இருக்கும் பல லட்சம் பேருக்கு ஒரு அற்புதமான வாய்ப்பாக இருக்கும்.
“ப்ளூ மூன்” எனும் விமானம் கடந்த மூன்று வருடங்களாக ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டில் உள்ளது. பெஸோஸ் 2024இல் பயணிகளை நிலவுக்கு இது கொண்டுசெல்லும் என உறுதியளித்தார்.
விண்வெளிப்பயணம் என்பது உலகின் பல பெரும் பணக்காரர்களின் விருப்பமாக உள்ளது. டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸிடம் (Space X) பெரும் திட்டங்கள் உள்ளது. இதேபோல இங்கிலாந்தைச் சேர்ந்த மற்றொரு பணக்காரரான ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் (Virgin Galactic) நிறுவனமும் இந்த செயல்பாடுகளில் உள்ளது.
ஆனால் பெஸோஸ் இத்திட்டம் வருங்கால சந்ததியினருக்குத்தான் என்று கூறுகிறார். “இன்று நான் முன்னெடுக்கும் இந்த திட்டம் பல தலைமுறைக்குமானது. இது ஒரு தலைமுறையில் முடிகிற செயல் அல்ல. எதிர்கால சந்ததியினரின் ஆர்வத்தைத் தூண்டுவதுபோல நாம் செயல்கள் அமையவேண்டும்” என்றார். இந்த விண்வெளிப் பயணத்திற்கான கட்டணம் எதுவும் இந்த சந்திப்பில் அவர் சொல்லவில்லை. ஆனால் நிச்சயம் குறைந்த விலையாக இருக்காது என்பது மட்டும் உறுதி.
மனிதக்குலம் தோன்றிய காலத்திலிருந்து நிலவை அண்ணாந்து பார்த்து ஒரு நாள் அங்குச் செல்ல முடியுமா என்ற ஆசைகளும் கனவுகளும் கொண்டிருந்த நமக்கு இப்போது நிலவுக்குப் போக முடியும் அங்கேயே தங்க முடியும் எனும் செய்தி நிச்சயம் சிலிர்ப்பூட்டுவதாக உள்ளது