நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் ஜாமின் மறுக்கப்பட்ட உதித்சூர்யாவை சிபிசிஐடி போலீசார் திருப்பதி மலை அடிவாரத்தில் வைத்து குடும்பத்துடன் கைது செய்துள்ளனர்.

தேனி அரசுக் கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர், இந்தாண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக உதித்சூர்யா நாளை மறுநாள் ஆஜராக வேண்டுமென உச்ச நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று அவரை குடும்பத்துடன் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அவரது வீடு கடந்த ஒரு வாரமாக பூட்டி கிடந்துள்ளது.

இதனால் 5 பேர் கொண்ட குழு தலைமறைவான உதித்சூர்யாவின் குடும்பத்தை தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பதி மலை அடிவாரத்தில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட உதித்சூர்யாவை சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

சென்னை அலுவலகத்தில் உதித்சூர்யா மற்றும் அவரது குடும்பத்திடம் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையில் உதித்சூர்யா மும்பையில் பயிற்சி பெற்றதிலிருந்து நீட் தேர்வு வரைக்கும் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருந்துள்ளது என்பதை குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.