நீட் தேர்வு மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை எதிர்த்து டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி எம்.பிக்கள் இன்று காலை ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை திரும்பப்பெறு!, நெக்ஸ்ட் தேர்வை நடத்தாதே!, மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டாதே! உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பான விவகாரங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் சூழலில் நெக்ஸ்ட் தேர்வு என்ற புதிய தேர்வினையும் மத்திய அரசு உருவாக்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
நெக்ஸ்ட் தேர்வு என்றால் என்ன?
நெக்ஸ்ட் தேர்வு என்பது மருத்துவ மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பின் இறுதி ஆண்டில் நடக்கவிருக்கும் வெளியேற்றத் தேர்வாகும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவோரே மேற்படிப்பு படிக்கத் தகுதிபெற்றவர்கள் ஆவர். இந்தத் தேர்வில் தேர்ச்சியடைவோர் மட்டுமே மருத்துவர்களாக அங்கீகாரம் பெறுவர். மேலும் இந்தத் தேர்வே வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களை அங்கீகரிக்கும் தேர்வாகவும் அமையும். இத்தேர்வினை நடத்துவதற்கான சரத்துகளை உள்ளடக்கிய ‘தேசிய மருத்துவ ஆணைய மசோதா’விற்கு மத்திய கேபினட் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம்:
இந்த மசோதா கடந்த 2017ஆம் ஆண்டே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அம்மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. தற்போது அந்த மசோதாவிற்கு கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இந்த மசோதா இந்திய மருத்துவக் கழகத்திற்கு பதிலாக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ என்ற புதிய அமைப்பை உருவாக்குகிறது. இதன்கீழ் நான்கு தன்னாட்சி வாரியங்கள் செயல்படும். இளங்கலை மருத்துவக்கல்வி வாரியம், முதுகலை மருத்துவக்கல்வி வாரியம், மருத்துவ ஆய்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம், நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரியம் ஆகிய நான்கு வாரியங்கள் செயல்படும். கேபினட் செயலாளர், மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர், நிதி ஆயோக் செயற்தலைவர் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்படும் 4 வல்லுநர்கள் அவர்களில் இருவர் மருத்துவதுறை சார்ந்தோர் ஆகியோரை உள்ளடக்கிய தேர்வுக்குழு ஒன்று அமைக்கப்படும். மேலும் மருத்துவ ஆலோசனைக்குழு ஒன்றும் அமைக்கப்படும்.
தேர்வுக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் மருத்துவ ஆணைய தலைவர் மற்றும் பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். ஒரு தலைவர், நான்கு வாரியத் தலைவர்கள், பொது சுகாதாரத்துறை இயக்கக இயக்குநர், இந்திய மருத்துவ ஆய்வுக்கழக இயக்குநர், தில்லி எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆகிய நிறுவங்களின் இயக்குநர்கள் உள்ளிட்ட ஐவர், ஐந்து பகுதி நேர உறுப்பினர்கள் மற்றும் சுழற்சி முறையில் மருத்துவ ஆலோசனைக் கழகம் பரிந்துரைப்போர் மூவர் மொத்தம் 25 உறுப்பினர்கள் செயல்படுவார்கள்.
இவ்வாணையம் மருத்துவ படிப்பிற்கான கட்டணத்தை வரையறுப்பதாகவும், தொழில்முறை மற்றும் நெறிமுறைசார் விஷயங்களில் மேல்முறையீட்டு ஆணையமாகவும் செயல்படும்.