நீட் விலக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு 12 கடிதங்கள் அனுப்பியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூலை 17) நடைபெற்ற சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார். அப்போது, “தமிழக அரசு அனுப்பிய 2 நீட் மசோதாக்களை 2017ஆம் ஆண்டே திருப்பி அனுப்பிவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதை ஏன் மறைத்தீர்கள்?. இதை முன்பே சொல்லியிருந்தால் மீண்டும் சட்டம் இயற்றி அனுப்பியிருக்கலாம். தற்போதாவது மசோதாவை மீண்டும் இயற்றி தமிழக அரசால் அனுப்ப இயலுமா?” என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “நீட் விவகாரத்தில் நாங்கள் எதையும் மறைக்கவில்லை. மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவே தமிழக அரசுக்கு கடிதம் வந்தது. திருப்பி அனுப்பியதாக நேற்றுதான் எங்களுக்கு தகவல் தெரிந்தது. மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள் என மத்திய அரசுக்கு இதுவரை 12 கடிதங்களை தமிழக அரசு எழுதியிருக்கிறது.
ஆனால் காரணத்தை மத்திய அரசு சொல்லவில்லை. காரணம் தெரிந்தால் தான் அந்த மசோதாக்களையே திருப்பி அனுப்ப முடியுமா அல்லது மீண்டும் மசோதா நிறைவேற்ற முடியுமா என முடிவு செய்ய முடியும். நீட் விவகாரத்தில் விளக்கம் கேட்டபின் மத்திய அரசு மீது வழக்குத் தொடர்வது பற்றி முடிவு செய்யப்படும்.” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீட் மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை எனவும் இதற்காக சிறப்புச் சட்டப்பேரவையைக் கூட்டி விவாதிக்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்கும்போது நீட் விலக்கு குறித்து அழுத்தம் கொடுத்தேன் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.