மெக்சிகோ, பத்திரிகையாளர்களுக்கு மிகவும் அபாயகரமான நாடாக மாறியிருக்கிறது, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பத்திரிகையாளர் நோர்மா சராபியா சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த வருடத்திலேயே மெக்சிகோவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது இது ஏழாவது முறை. பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கமிட்டியின் ஜேன் ஆல்பர்ட் ஹூட்சன் ‘எனக்கு எண்களில் குறிப்பிட்டுப் பேச விருப்பமில்லை, ஆயினும் ஒரு வருடத்திலேயே 10, 15 பேர் கொல்லப்படுகையில், பத்திரிகையாளர்களைக் குறிவைத்து நடத்தப்படுகின்ற வன்முறையின் அளவைக் காட்ட நான் எண்களில் பேச வேண்டியிருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். ஆம், 2017-இல் ஒன்பது பேர், 2018-இல் பத்து பேர், 2019-இல் ஆறு மாத காலத்திற்குள்ளாக ஏழு பத்திரிகையாளர்கள் மெக்சிகோவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இதில் பலர் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான படைப்புகளை, மறைவில் நடக்கும் குற்றங்களைப் பொதுமக்களிடம் எடுத்துக்காட்டியவர்கள், முக்கியமாக மெக்சிகோவின் போதை மாபியா நெட்வொர்க்கை பொதுத் தளத்தில் உரித்துக்காட்டியவர்கள். இவர்கள்தான் குறிவைத்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களுள் ஒருவர்தான் ஜேவியர் வல்டேஸ், போதை மாபியாவில் செலவிடப்படும் மனித சக்தியை ஆவணப்படுத்தியவர், இவர் 2017-இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நோர்மா சராபியா ஊழலைக் குறித்து செய்திகளைச் சேகரித்து வந்திருக்கிறார், கடந்த செவ்வாய்க்கிழமை அவர் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். மெக்சிகோவின் மனித உரிமைகள் ஆணையம் சராபியாவுடன் சேர்த்து 149 பத்திரிகையாளர்கள் கடந்த 2000 வருடத்தின் ஆரம்பத்திலிருந்து கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்திருகிறது. அதனாலேயே, மெக்சிகோ பத்திரிகையாளர்களுக்கு மிகவும் அபாயகரமான நாடுகளுள் ஒன்றாக ஆகியிருக்கிறது.
இத்தனை வருடங்களில் நடந்த கொலைகளில் பெரும்பாலும் அரசியல் கொலைகள் இல்லை என்றே ஹூட்சன் கூறுகிறார். ஆனால், அரசாங்கத்தின் தரப்பிலிருந்து முறையான கவனம் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பிற்கும், நடந்த கொலைகளின் விசாரணைக்கும் கொடுக்கப்படவில்லை என்றே ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ‘அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இந்தக் கொலைகளைக் குறித்து கொஞ்சமும் கவலை இல்லை’ என்று உள்ளூர் ஊடக அமைப்பின் தலைவர் லூயிஸ் அண்டோனியோ விடல் எழுதியிருக்கிறார். மெக்சிகன் அரசின் இந்த விட்டேத்தியான போக்கைத்தான் எல்லா பத்திரிகைகளும் கண்டிக்கின்றன.
தற்போதைய அதிபர் லொபஸ் ஒப்ரடார் தனது பதவியேற்பின்போது கருத்து சுதந்திரத்திற்குத் தன் ஆட்சியில் எப்போதும் தடைகள் இருக்காது என்று தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பிற்கு எல்லா தரப்பிலிருந்தும் பெரும் மகிழ்ச்சிக் குரல்கள் எழுந்தன. ஆனாலும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாததும், தொடர்ச்சியாகக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதும் எல்லா தரப்பினரையும் வேதனைப்படுத்துகிறது.