மக்களவை தேர்தலுக்கு பாஜக சார்பில் நாடு முழுவதும் போட்டியிடும் 184 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலில், 35 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிப்பது, தேர்தல் அறிக்கை மற்றும் பிரச்சாரங்கள் என மும்மரமாக தேர்தலுக்கான வேளைகளைச் செய்து வருகின்றனர்.
பாஜக சார்பில் நாடு முழுவதும் போட்டியிடும் 184 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை நேற்று முன்தினம் (மார்ச் 21) வெளியிடப்பட்டது பாஜக. இதுகுறித்து, தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்று, ஜனநாயக சீர்திருத்த அமைப்பு இணைந்து ஆய்வு ஒன்று நடத்தியது. இந்த ஆய்வில், பாஜகவின் 184 வேட்பாளர்கள் பட்டியலில் 35 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இது மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கையில் 19 சதவீதம். குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலின் வெற்றி சதவிகிதம் 13% ஆகவும், குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்களின் வெற்றி சதவிகிதம் 5% உள்ளதாகவும் அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 78 பேர் மீண்டும் இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். மேலும், பாஜக வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ஹேமா மாலினி உள்ளிட்ட 18 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் மத்திய உள்துறை அமைச்சக இணையமைச்சரும், மகாராஷ்டிராவின் சந்திரபூர் தொகுதி வேட்பாளருமான ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் மீது அதிகபட்சமாக 11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடுத்தபடியாக, ஒடிசாவின் பாலசோர் தொகுதி வேட்பாளரான பிரதாப் சாரங்கி மீது 10 வழக்குகளும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீது 5 குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும், பாஜக மக்களவை உறுப்பினர் சாக்ஷி மகாராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மீதும் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதிதாகப் போட்டியிடும் 106 வேட்பாளர்கள், தங்களது வேட்பு மனுவில் புதிதாகக் குற்றப்பின்னணி குறித்துத் தெரிவித்தால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.