பாபர் மசூதி வழக்கு விசாரணையை இன்னும் 9 மாதகாலத்திற்குள் கீழ்நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி கட்டப்பட்டு இருக்கும் இடம் ராமர் பிறந்த இடம் என இந்துக்கள் கூறிவரும் நிலையில், அங்கு ராமர் கோயில் கட்ட இந்துத்துவவாதிகள் முயற்சி செய்துவருகின்றனர். இந்த சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை ரேபர்லி நீதிமன்றம் விடுதலை செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. இதனையடுத்து பாஜக தலைவர்கள் விடுவிப்பை எதிர்த்து சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
அப்போது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடத்தும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை விரைவில் முடித்து இரு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது வருகிறது.
இந்நிலையில், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி தொடர்பான வழக்கைக் கீழ் நீதிமன்றம் 9 மாதத்தில் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.