பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளையும் தமிழக அரசு நியமித்துள்ளது. விழாக்கோலம் பூண்டுள்ள ஈசிஆர் சாலை பல வண்ண விளக்குகளுடன் ஜொலிக்கிறது. மேலும் இருநாட்டு தலைவர்களுக்கான குண்டு துளைக்காத கண்ணாடி அறை, கலைநிகழ்ச்சிகளுக்கான மேடை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் ஷி ஜின்பிங்க்கை வரவேற்பதற்காக வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் காவி நிறமும், சிவப்பு நிறமும் ஒருங்கே அமைந்துள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி வண்ணத்தைக் குறிக்கும் சிவப்பும், பாஜக கொடி வண்ணத்தைக் குறிக்கும் காவியும் வரவேற்பு பதாகைகளின் பிரதான நிறங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியா தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது. தமிழ், இந்தி, சைனீஷ் ஆகிய மூன்று மொழிகளில் பேனர்களில் எழுதப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை வைக்கப்பட்டுள்ள பேனர்களில் பெரும்பாலனவைகளில் ஆங்கிலம் தவிர்க்கப்பட்டு, இந்தி, சைனீஸ், தமிழ் மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சீன மொழியில் வரவேற்பு அளித்து ஷி ஜின்பிங்கின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக அரசு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்துள்ளன.
ஏற்கனவே எல்லா அரசியல் கட்சிகளும் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் ஈசிஆர் சாலையை புதுமையாக்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாமல்லபுரத்தில் மட்டும் 2 ஐ.ஜி, 4 டி.ஐ.ஜி, 15 ஏ.எஸ்.பி-க்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குதிரைகள் மூலமாக காவலர்கள் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, கடலிலும் இந்தியா – சீனா போர்க்கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மின்பிடிக்கச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி வரை மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருமண நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் டிரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.