பிரதமர் மோடியின் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் பி.எம் நரேந்திர மோடி திரைப்படத்திற்கு நான் பாடல் எழுதவில்லை எனப் பிரபல பாடலாசிரியர் ஜாவிட் அக்தர் மறுத்துள்ளார்.
பழம்பெரும் பாடலாசிரியர் அக்தர் வெள்ளிக்கிழமை அன்று பி.எம் நரேந்திர மோடி படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துதான் அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தார். அதில் பாடலாசிரியர் என தன் பெயர் இடம்பெற்றிருப்பதே அதற்குக் காரணம். அவருடைய பெயருடன் மற்ற பாடலாசிரியர்களான ப்ரசூன் ஜோஷி, சமீர், அபேந்திர குமார் உபாண்டே சர்தாரா மற்றும் பர்ரி லவ்ராஜ் அதில் இடம்பெற்றிருந்தன.
“படத்தின் போஸ்டரில் எனது பெயரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன், நான் இதில் எந்தப் பாடலும் எழுதவில்லை” என்று அக்தர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிரைலரின் இறுதியில் காண்பிக்கப்படும் படத்தில் பணிபுரிந்தோர் பட்டியலை எடுத்துப் பதிவிட்டிருக்கிறார்.
இந்த படம் நரேந்திர மோடியின் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ராஷ்ட்ரீய சுவயம்சேவாக் சங்கத்தில் அவரது ஆரம்பக் காலத்தையும், குஜராத் முதல்வராக அவரிருந்த நீண்ட காலத்தையும் அது அவரை எப்படி 2014 இல் இந்தியாவின் பிரதமராக வெற்றிபெற வழிசெய்தது என்பதையும் காண்பிக்கிறது.
இந்த படம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது. அதாவது 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு. பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தப் படம் மார்ச் 10 அன்று முதல் நிலுவையில் இருக்கும் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக எதிர்க்கின்றனர்.
மோடி தான் சர்ச்சைகளுக்குப் புகழ்பெற்றவர், எந்த விதிகளையும் மதிக்காதவர் என்றால் அவரைப் பற்றிப் படமெடுப்பவர்கள் கூடவா அதைப் பின்பற்றவேண்டும்? புகழ்பெற்ற பாடலாசிரியரின் பெயரை அவர் அந்தப் படத்தில் பாடல் எழுதவில்லையென்றாலும்கூட அவரது அனுமதியின்றி வெளியிட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி அதைப் படத்திற்கான விளம்பர யுக்தியாகப் பயன்படுத்துவதுபோலத்தான் தெரிகிறது. ஒரு நல்ல படத்திற்கு இவை எதுவும் தேவையில்லை.