பெரியகுளம் தொகுதியின் அதிமுக வேட்பாளரான முருகனை அதிரடியாக மாற்றி, மயில்வேல் அவர்களை வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக தலைமை.
தமிழகத்தில் மக்களவை தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக-திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. மேலும், வேட்புமனு தாக்கலும் தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்களும் களைகட்டிவருகின்றன.
தேனி மாவட்டம், பெரியகுளம்(தனி) தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் முருகன் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பெரியகுளம் அதிமுக வேட்பாளர் முருகனை மாற்றி, அவருக்கு பதிலாக மயில்வேலை வேட்பாளராக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தேனி அல்லி நகர புரட்சி தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் மயில்வேல்.
இதுதொடர்பாக அதிமுக தலைமை அறிக்கை ஒன்றை இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் முருகனுக்கு பதிலாக தேனி அல்லி நகர புரட்சி தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் மயில்வேல் நிறுத்தப்படுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.
தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் லோகிராஜன் ஆகியோரை சமீபத்தில் அறிமுகம் செய்து தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார் ஓ.பன்னீர் செல்வம். இந்தக் கூட்டத்தில் முன்னர் அறிவிக்கப்பட்ட பெரியகுளம் தொகுதி வேட்பாளரான முருகன் கலந்துகொள்ளவில்லை. இதனால் அதிமுக தலைமை அதிருப்தியானதாக கூறப்படுகிறது.
மேலும், முருகன் கட்சிக்கு புதியவர் என்பதாலும், தொகுதிக்கு வராமல் சென்னையிலே அவர் இருப்பதாலும் பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை மாற்றக்கோரி அதிமுக தொண்டர்கள் கூறியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், முருகன் திடீரென இன்று மாற்றப்பட்டுள்ளார்.
இன்று காலை அமமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவில் பெரியகுளம் வேட்பாளரை மாற்றியது குறிப்பிடத்தக்கது.