கர்நாடகாவில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று (ஜூலை 12) கூடிய மழைக்கால கூட்டத்தொடரில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவைச் சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை.
இதனிடையே சபாநாயகர் தங்களது பதவி விலகும் கடிதத்தை ஏற்காமல் காலந்தாழ்த்தி வருவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், இதை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரைச் சந்தித்து தங்களது பதவி விலகும் முடிவைத் தெரிவிக்க வேண்டும் உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த சந்திப்பின்போது எம்எல்ஏக்கள் பதவி விலகல் குறித்து சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதைதொடர்ந்து, மும்பையிலிருந்து சிறப்பு விமானத்தில் பெங்களூரு வந்த எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை மீண்டும் அளித்தனர். இதற்கிடையில் ராஜினாமா விவகாரத்தில் முடிவெடுக்குமாறு நீதிபதிகள் அளித்த அறிவுறுத்தலுக்கு எதிராக, சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு மீதான விசாரணை, இன்று வந்தது.
அப்போது, “கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது. அரசியல் சாசன விவகாரம் என்பதால், விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.
இதற்கிடையில், கர்நாடகாவில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று 11 நாள் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி, எனக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மாநிலத்தில் நிலவிவரும் சூழல் சரியில்லாத காரணத்தால், நான் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்றால் மட்டுமே நான் முதல்வராக பணியில் தொடருவேன். எனவே, சபையில் எனது பெரும்பான்மையை நிரூபிக்க நானே முன்வந்து கூறுகிறேன். இதற்கு சபாநாயகர் என்னை அனுமதிக்க வேண்டும். சபாநாயகர் நேரம் அளித்தால் எனது பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.” என்று கூறினார்.