ரயில்வே டிக்கெட்டில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றதை தொடர்ந்து தற்போது ஏர் இந்தியாவின் போர்டிங் பாஸிலும் மோடி மற்றும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியின் படம் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் முன்னால் டிஜிபியான சஷிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “2019 மார்ச் 25 இன்று டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி படங்கள் அச்சிடப்பட்ட வைப்ரண்ட் குஜராத் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் பணத்தை ஏன் இப்படி வீண் அடிக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் கேட்காமல், பேசாமல் இருப்பது ஆச்சிரியமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவு குறித்து விளக்கம் அளித்த ஏர் இந்தியாவின் செய்தித்தொடர்பாளர் தனஞ்ஜெய் குமார், “இது மூன்றாம் தரப்பினர் அளித்த விளம்பரம். துடிப்பான குஜராத் மாநாடு என்ற மாநாட்டிற்காக அச்சிடப்பட்ட போது, அதிலிருந்து மிஞ்சிய விளம்பரங்கள்தான் தற்போது போர்டிங் பாஸில் இடம்பெற்றுள்ளன. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக இருந்தால் அவை திரும்பப் பெறப்படும்” என்று தெரிவித்தார்.
ரயில்வே டிக்கெட்டில் மோடியின் புகைப்படம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, கடந்த வாரம் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அளித்தார். அதை தொடர்ந்து, மோடியின் புகைப்படம் இடம்பெற்ற ரயில்வே டிக்கெட் நிர்வாகத்தின் மூலம் திரும்பப் பெறப்பட்டது. மேலும் இந்த புகாரை அடுத்து இந்த ரயில் டிக்கெட்டை விநியோகம் செய்ய வேண்டாம் என்று அனைத்து ரயில் கோட்டங்களுக்கும் வலியுறுத்தப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.