மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் நடைபெற்ற தேர்தலின்போது பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 323 இயந்திரங்கள் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், 48 மக்களவை தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் நான்கு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி நான்காம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கப்பட்ட அறைக்கு கொண்டுவந்து பாதுகாக்கப்படும். பின்னர், வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் முடிவுகள் மே 23ஆம் தேதி அறிவிக்கப்படும்
இந்நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்று முடிந்த பிறகு 323 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளிவந்திருக்கிறது. அதாவது, கொடுக்கப்பட்ட நேரத்திற்குமேல் ஒரு நாள் கழித்து அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுக்கப்பட்ட அறைகளில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கிறதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனா கட்சி தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு சரியான விளக்கங்கள் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப் பெறவில்லை. கிட்டத்தட்ட 23 மணி நேரம் கழித்து தாமதமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுக்கப்பட்ட அறைகளுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி சிவாஜி கட்பானே தெரிவிக்கையில், சில காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டது. அதனாலேயே சரியான நேரத்திற்குள் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்கப்பட்ட அறைகளில் கொண்டுசேர்க்க முடியவில்லை.”
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பல சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், இந்த தகவலானது தேர்தல் நடந்துள்ள விதம் குறித்து பெரும் ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.