எந்தப் பதவியும் தனக்கு தேவையில்லை என்றும் அதிமுகவின் எதிர்கால நலன், வெற்றியை கருத்தில்கொண்டும் அதிமுகவுக்கு இந்தத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலும், தமிழகத்தில் காலியாகவுள்ள 18 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவருகிறது. கடந்த 15ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைவரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபா ஜெ.தீபா, மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை தியாகராஜ நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெ.தீபா. “தொண்டர்களின் விருப்பப்படி, வரும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கிறோம். எந்தப் பதவியும் தனக்கு தேவையில்லை. அதிமுகவின் எதிர்கால நலன், வெற்றியை கருத்தில்கொண்டு அதிமுகவுக்கு இந்தத் தேர்தலில் ஆதரவு அளிக்கிறோம். இந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற எனது தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்” என அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய ஜெ.தீபா, அதிமுகவோடு இணையும் பேச்சுவார்த்தை தேர்தலுக்குப் பிறகு தொடரும் என்றும் அதிமுக தலைமையிலிருந்து அழைப்பு வந்தால் பரப்புரை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.