2019 மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 11ம் தேதி தொடங்கவுள்ளதை முன்னிட்டு மேகாலயாவில் பார்வையற்றோருக்காக, பிரெய்லி வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தும்முறையை தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேகாலயாவில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வருகின்ற ஏப்ரல் 11 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிரமாக களமிறங்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அம்மாநில தேர்தல் ஆணையம், 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. மாற்றுத் திறனாளிகள், வாக்குச்சாவடிகளில் காத்திருக்காமல் விரைவில் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து, பார்வையற்ற வாக்காளர்கள் வாக்களிக்க பிரெய்லி வாக்குச்சீட்டுகளை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து மேகாலயா தலைமை தேர்தல் அதிகாரி கர்கோங்கர் கூறியதாவது,” “மேகாலயாவில் முதல் முறையாக வரவிருக்கும் தேர்தலில் பிரெய்லி வாக்குச்சீட்டுமுறையை பயன்படுத்த உள்ளோம். 800க்கும் மேற்பட்ட பார்வையற்ற வாக்காளர்கள் ரகசியமாக தங்கள் வாக்கை பதிவுசெய்ய இந்த வசதி செய்யப்படுகிறது. மொத்தம் 4500 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உள்ளனர். பார்வையற்றோர் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் ஆகியவை பிரெய்லி முறையில் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டு ஒட்டப்பட்டிருக்கும். எனவே, பார்வை குறைபாடு உள்ளவர்கள் யாருடைய உதவியும் இன்றி தாங்களாகவே சுதந்திரமாக வாக்களிக்க இயலும்.
மேகாலயாவில் இளைஞர்கள், பொது மக்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவருக்கும் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் சமூக ஆர்வலர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தானாக முன்வந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்தார்