2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு பல தரப்பில் இருந்தும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இறுதிச் செய்யப்பட்ட நிலையில் நீலகிரி தனித் தொகுதியில் அதிகபட்சமாக 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, தேர்தல் ஆணையம் இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் சேர்த்து 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 65 வேட்பாளர்கள் பெண்கள். ஒருவர் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்.
தேர்தல் ஆணையம் வெளியிடுள்ள வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 845 வேட்பாளர்களில் 559 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர். இதனையடுத்து, தொகுதிகள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் வேட்பாளர் பட்டியலில், கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 42 வேட்பாளர்கள் களம் காண உள்ளனர். இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி என்பவர் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை போட்டியிடுகிறார்.
இதனையடுத்து, நீலகிரி தனித்தொகுதியில்தான் தமிழ்நாட்டிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 10 வேட்பாளர்கள் மட்டுமே இங்கு களத்தில் உள்ளனர். இங்கு தி.மு.க. கூட்டணியின் சார்பில் ஆ. ராசாவும், அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் எம். தியாகராஜனும் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் 18 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் மொத்தம் 274 பேர் போட்டியிடுகின்றனர். பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 40 பேரும் குடியாத்தம் தொகுதியில் குறைந்தபட்சமாக 7 பேரும் போட்டியிடுகின்றனர்.