2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தெலுங்கானாவில் 2.5 லட்சம் வாக்காளர்கள் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல்,11 தொடங்கி மே,19 வரை ஏழு கட்டமாக நடக்கவிருக்கும் 2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு தெலுங்கானாவில் அரசியல் கட்சிகள் கூட்டணி உறுதியாகியுள்ளது. முதல் கட்டமாக ஆந்திர பிரதேசம், தெலுங்கானா உட்பட 20 மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தலுக்காக வேட்பாளர் பட்டியல் சரிபார்த்து வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தெலுங்கானாவில் தேர்தல் ஆணையம், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ‘பாகுபலி’, ‘ஆப்பிள்’ என 37 பெயர்கள் வாக்காளர்கள் பெயர்களாக பதிவாகியுள்ளது. இதனை கண்டறிந்த தேர்தல் ஆணையம் உடனடியாக நீக்கியுள்ளது.
இதுகுறித்து தெலங்கானா தலைமைத் தேர்தல் அதிகாரி ரஜத்குமார் கூறும்போது, ” சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, 17 லட்சம் வாக்காளர்களைப் புதிதாகச் சேர்த்துள்ளோம். எழுத்துப்பிழை மற்றும் ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக வாக்காளர்கள் பெயர்களில் தவறு நேர்ந்திருக்கலாம். இதில் 18 பேரின் பெயர்களை நீக்கியுள்ளோம். சுமார் 2.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 1.9 லட்சம் பெயர்கள் போலியானவை. 44 ஆயிரம் பேர் இறந்துவிட்டனர். தொடர்ந்து வாக்காளர் பட்டியலைச் சீரமைத்து வருகிறோம். பட்டியலில் ஐபிஎஸ் அதிகாரி கிருஷ்ண பிரசாத், பாட்மிண்டன் வீரர் ஜ்வாலா கட்டா ஆகியோரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. பொதுவாக சிலரின் பெயர்கள் விடுபடுவது வழக்கம்தான். ஆனால், விஐபிக்களின் பெயர் விடுபடும்போது பெரிய கவனத்தை ஏற்படுத்திவிடுகிறது. விரைவில் அவர்களது பிரச்சினைகள் சரிசெய்யப்படும்” என்றார்.