மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் 50% ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு எண்ணக் கோரிய சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
2019 மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு செலுத்தும் முறையில் புதிய நடைமுறையாக வாக்கு ஒப்புகை சீட்டு முறை கொண்டுவரப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதால், மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறலாம் என எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதைதொடர்ந்து, ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த பட்சம் வாக்கு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திர பதிவுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 21 கட்சியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் வாக்கு இயந்திர பதிவுகளுடன் ஒப்புகை சீட்டு பதிவுகளை எண்ணி பின்னர் ஒப்பீடு செய்து சரி பார்க்க இயலுமா என்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டிருந்தது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கவாய்ப்பில்லை எனக் கூறிய தேர்தல் ஆணையம், வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கு வாய்ப்பில்லை என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மே 7) விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையில் 50% வாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க அவசியமில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 21 எதிர்கட்சிகள் தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.