மதுரையில் சித்திரை திருவிழாவும், மக்களைவை தேர்தலும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே சமயத்தில் நடைபெறுவதால், மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
மதுரை சித்திரை திருவிழாவையொட்டி தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு தேதியை மாற்றுவது சிக்கல் என்றும் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். மதுரை தவிர மற்ற தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடப்பாண்டுக்கான சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2019 மக்களவை தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் சேர்த்து வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மதுரையில் நடைபெறும் சித்திரை தேரோட்டத்தைக் காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் அன்றைய தினம் மதுரையில் தேர்தல் நடத்துவதில் சிரமம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் ஏற்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதுரையில் மக்களவை தேர்தலைத் தள்ளிவைக்கக்கோரி வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். மதுரையில் தேர்தல் தேதியை மாற்றமுடியாது என்று தெரிவித்த தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு அன்று இரண்டு மணி நேரமும் அவகாசத்தை நீட்டிக்க தயராக உள்ளதாக தெரிவித்திருந்தது.