மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

காயிதே மில்லத்தின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழை கொண்டு வரவேண்டும் எனக் குரல் கொடுத்தவர் காயிதே மில்லத் என்பதைச் சுட்டிக் காட்டினார்.

மேலும், மத்திய அரசின் அலுவலகங்களில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அதற்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். இதேபோன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரும் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.