மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
காலங்காலமாக முஸ்லீம் பெண்களை அவரது கணவர் தலாக் என்று மூன்று முறைக் கூறி விவாகரத்து செய்யும் பழக்கம் இருந்துவந்தது. இதில் முஸ்லீம் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுவந்தது. முத்தலாக் நடைமுறைக்குத் தடை விதிக்கும் சட்டத்தைக் கடந்த ஆண்டு செப்டமர் மாதம் மத்திய அரசு கொண்டுவந்தது.
இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி இம்மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர், குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்திடம் ஒப்புதல் பெற அனுப்பிவைக்கப்பட்டது. இம்மசோதாவிற்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதைதொடர்ந்து, இச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்தின்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். மனைவி மற்றும் குழந்தைக்குக் கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம்.
மேலும் கைது செய்யப்படும் நபருக்கு, அவரது மனைவியின் கருத்துக்களைக் கேட்டபிறகு ஜாமீன் வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.