சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் திருவுருவ சிலையை இன்று திறந்து வைத்தார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இன்று காலை 8 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி ஊர்வலமாகச் சென்று மெரினா கடற்கரையில் உள்ள அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திமுக அதிகாரப்பூர்வ இதழான முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்புவிழா இன்று மாலை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கருணாநிதியின் திருவுருவ சிலையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திக தலைவர் கீ.வீரமணி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
6.5 அடி உயரத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலை உட்கார்ந்திருந்து எழுதுவது போன்ற வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தில் அமைக்கப்பட்ட இச்சிலையின் அகலம் 6.3 அடி ஆகும். சிலை முதல் பீடம் வரையிலான பகுதி 30 டன் எடை கொண்டுள்ளது. கிரானைட் கற்களால் முப்பரிமாண தோற்றத்தில் பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பீடத்தில் “கலைஞரின் 5 கட்டளைகள்” இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, தற்போது சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றனர்.