பிரதமர் மோடி அளித்த ரூ. 15 லட்சம் வாக்குறுதியில் இருந்துதான் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கான ஐடியா வந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வறுமை ஒழிப்பு திட்டம் என்ற ஒன்றை வாக்குறுதியாக அளித்துள்ளார். வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் 20 சதவீத மக்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ. 6 ஆயிரம் என ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்கப்படும் என ராகுல் கூறியுள்ளார்.
இத்திட்டத்திற்கு பாஜக கட்சியை சேர்ந்தோர் மற்றும் மாயாவதி ராகுலை தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விமர்சனங்களுக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். அரியானா மாநிலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியதாவது-
பிரதமர் மோடி நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் தலா ரூ. 15 லட்சத்தை போடுவேன் என்று வாக்குறுதி அளித்தார். அவர் பொய்தான் கூறினார். யாராவது அந்தத் தொகையை பெற்றார்களா? ஆனால் அவர் அளித்த வாக்குறுதிதான் காங்கிரசின் திட்டத்திற்கு உதவியது. ஏழை மக்களுக்கு நிதியுதவியை அவர்களது வங்கி கணக்கில் அளிப்பதுதான் மிகச் சரியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.