தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 80 கோடி ரூபாய் பணமும், 132 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. நாடுமுழுவதும் தேர்தல் ஆணையம் நடத்திய பணப்பட்டுவாடா கண்காணிப்பில் தமிழகத்தில் அதிகளவில் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, முதலிடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இன்று (ஏப்ரல் 2) செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹு, “நேற்று மட்டும் தேர்தல் பறக்கும் படையினரால் சுமார் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 80 கோடியே 35 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 132 கோடி ரூபாய் மதிப்பிலான 468 கிலோ தங்கமும், ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 414 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
வேலூரில் வருமானவரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்த சத்யபிரதா சாஹு, இதுவரையில் அறிக்கை ஏதும் வரவில்லை எனத் தெரிவித்தார். மேலும் வேலூர் சோதனை குறித்து அறிக்கை பெறப்பட்ட பின்னர், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அதிகாரிகள் இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார் சத்யபிரதா சாஹு.