வரும் மக்களவை தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
2019 மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்சிகளும் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடப்போகிறோம் என வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில் ராகுல்காந்தி தென்னிந்தியாவில் போட்டியிடவேண்டும் எனத் தென்னிந்தியாவில் உள்ள காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடுவதாகவும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால், இரண்டாவதாக கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரான ஏ.கே. அந்தோணி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இரண்டாவதாக போட்டியிடும் வயநாடு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் ராகுல்காந்தி. இதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நாளை வயநாடு வருகின்றனர்.
வயநாட்டில் போட்டியிடுவது குறித்து ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார். “நாட்டின் முக்கிய முடிவுகளில் தாங்கள் பங்கு வகிக்கவில்லையோ என்று தென்னிந்திய மக்கள் எண்ணுகின்றனர். பிரதமர் மோடியால் தென்னிந்தியா அச்சத்தில் இருக்கிறது. மோடி குறித்து தென்னிந்திய மக்கள் எதிர்ப்புணர்வு கொண்டுள்ளனர். தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே நான் வயநாட்டில் போட்டியிடுகிறேன்.” என்று கூறினார் ராகுல்காந்தி.