உண்மைகள் கசக்கலாம் ஆனால் பேசித்தானே தீரவேண்டும்.
சமூக நீதி தத்துவத்தினை சாய்க்கும் சதித்திட்டத்துடன் உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மோடி அரசு அறிவித்ததை தொடர்ந்து இது நாடெங்கும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆதிக்க சாதியினருக்கு வால் பிடிக்கும் மோடி அரசு பலத்த விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு எத்தகைய பித்தலாட்டம் என்பதை நிரூபிக்கும் விதமாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. புனேவின் சாவித்ரி பா பூலே பல்கலைக்கழகம், டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் தலித் ஸ்டடீஸ் ஆகியவை இணைந்து 2 ஆண்டுகால ஆய்வில் பல முடிவுகள் வெளிவந்துள்ளன.
இந்திய அளவில் 22.3 சதவீதம் மட்டுமே இருக்கும் உயர் சாதியினர் நாட்டின் மொத்த செல்வத்தில் 41 சதவீதம் வைத்த பண பலம் படைத்த இந்தப் பிரிவினருக்குத்தான் பொருளாதார அடிப்படையில் 10 சதவீதம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் கொடுத்தே தீரவேண்டும் என சில புண்ணியவான்கள் குதி குதியென குதிக்கிறார்கள். இதென்ன காலக்கொடுமை பார்த்தீர்களா?
நாட்டில் 7.8 சதவீதம் உள்ள பழங்குடியின மக்களுக்கு நாட்டின் மொத்த சொத்துக்களில் வெறும் 3.7 சதவீதம் மட்டுமே உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உயர் சாதியின் முதலிடத்தில் உள்ள பிரிவினருக்கு நாட்டின் உறைவிட வசதிகளில் உள்ள மொத்த 25 சதவீதம் சொந்தமாக உள்ளது. உயர் சாதியினரின் முதல் 5 சதவீதத்தினர் நாட்டில் உறைவிட வசதிகள் 45 சதவீதம் இவர்களின் உரிமையானவை.
நாட்டின் மொத்த சொத்துக்களில் அதாவது 3 லட்சத்து 61 ஆயிரத்த்து 919 பில்லியன் மதிப்பீட்டிலான தொகையில் நாட்டின் கடைநிலை மக்களான 40 சதவீதத்தினர் 3.4 சதவீத சொத்துக்களையே பெற்றுள்ளனர்.
2013இல் அகில இந்திய கடன்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான தேசிய மாதிரி சர்வேயில் (என் எஸ் எஸ் ) இவை தெரியவந்தது. இதனை ஆய்வுக்கண்னோட்டத்தில் பார்த்தோமானால் சொத்துக்களை வகைப்படுத்தும்போது சமூக சமய அடிப்படையில் மத்திய அரசின் தற்போதைய 10 சதவீத இடஒதுக்கீடு கடும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறது.
சொத்துக்கள் உடையவர்கள் யார் என்பதில் சமநிலையற்ற தன்மை நிலவுகிறது. சாதி இன்னும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை மறுக்க முடியவில்லை.
கல்வி, வேலை வாய்ப்பு பெறும் சூழல் மற்றும் சொத்துக்களின் உரிமை, நிலங்களின் மற்றும் கட்டிடங்களின் உரிமை, உயர்சாதி ஹிந்துக்களின் அளவுக்கு யாருக்கும் இல்லை என்பதே உண்மை.
புனேயின் சாவித்ரி பாலா பூலே பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் நிதின் தகாதே இதனை ஏற்றுக்கொள்கிறார்.
ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 800 வீட்டு உரிமையாளர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 20 இந்திய மாநிலங்களில் 56 சதவீதம் நகர்புறங்களில் 44 சதவீத கிராமப்புறங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு பிரிவு மக்களிடையே ஹிந்து பட்டியலினம் ஹிந்து பழங்குடியினர், ஹிந்து அல்லாத பட்டியலினம், ஹிந்து பிற்படுத்தப்பட்ட மக்கள், ஹிந்து உயர் சாதியினர் முஸ்லீம் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் சொத்துக்கள் குறித்து கண்டறியப்பட்டன
நகர்ப்புறங்களில் உயர் சாதியினரின் சொத்து விவரங்கள் ஆய்வின் படி 34.9 சதவீத சொத்துக்கள் உயர் சாதியினரிடத்தில் உள்ளது. கிராமப்புறங்களில் 16.7 சொத்துக்கள் உயர் சாதியினரிடத்தில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
பழங்குடியினர் கிராமப்புறங்களில் 10.4 சதவீத சொத்துக்களை சொந்தமாக கொண்டுள்ளனர். இதைவிட பலமடங்கு சொத்துக்கள் அவர்கள் பெற்று வாழ்ந்து இருப்பார்கள் அதைத்தான் அந்த இயற்கை வளங்களைதான் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் கபளீகரம் செய்துவிட்டன. அதே பழங்குடியின மக்கள் நகர்ப்புறங்களில் 2.8 சதவீத சொத்து மட்டுமே சொந்தமாக உள்ளது. இந்த அவலம் குறித்து ஜெ ஏன் யூ பல்கலைக்கழக பேராசிரியர் சுகாடோ தோரட் கூறுகிறார் பட்டியலின பழங்குடியினர் வேலை வாய்ப்பு மற்றும் கல்விக்காக சொற்ப அளவே இடம் பெயருகின்றனர். குறைந்த வருமானம் பெரும் அவர்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரும்போது சேரி வாசிகளாகவே மாறிவிடுகின்றனர் என்று குறிப்பிட்டார். வரலாற்றுரீதியாகவே சொத்து மற்றும் கல்வி உரிமை உயர் சாதியினருக்கு சொந்தமானதாக இருந்து வருகிறது .இன்றுவரை மாறவேயில்லை
இந்துக்களிடையே இன்றுவரை சாதிக்கு உரிய முக்கியத்துவம் மாற்றமில்லாமல் தொடர்கிறது சமத்துவமற்ற தன்மை பாகுபாடு இன்றும் விளிம்புநிலை மக்களிடையே சுமத்தப்படுகிறது. சொத்துக்கள் வாங்குதல், தொழில் வாய்ப்பு இன்றுவரை உயர் சாதியினரால் முட்டுக்கட்டை போடப்படுகிறது
சொத்துக்களின் பங்கீட்டினைப் பொறுத்த அளவில் ஹிந்து உயர் சாதியினர் 41 சதவீத சொத்துக்களையும், ஹிந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் 30 .7 சதவீத சொத்துக்களையும் பிற சமூகத்தினர் 9 சதவீதமும், ஹிந்து பட்டியல் இனத்தவர் 7.6 ம் பழங்குடியினர் 3.7 ம் சொத்துக்களின் உரிமையாளர்களாக உள்ளனர்
மராட்டியம் உபி, கேரளா, தமிழ்நாடு, ஹரியானா, ஆகிய 5 மாநிலங்களில் மொத்த சொத்துக்களில் 50 சதவீதம் உயர் சாதியினருக்கு சொந்தமானதாகும். இந்த ஆய்வின் படி முதல் பணக்கரா மாநிலம் மராட்டியம் (17சதவீதம் )இரண்டாவது உபி (11.6 சதவீதம் ) கேரளா (7.4 ) ஆகும்.
ஏழை மாநிலங்களாக ஒடிசா 1.7 ஹிமாச்சல், 1சதவீதம், உத்தரகண்ட் 0.9 ஆனால் பணக்கார மாநிலமான மராட்டியத்தில் 10 சதவீத உயர் சாதியினர் வசம் மாநிலத்தின் 50 சதவீதம் சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் சமுக அடுக்களிலும் பொருளாதார நிலையிலும் உயர் தரத்தில் உள்ள அந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தே தீரவேண்டும் என்று துடிப்பவர்களை என்னவென்று சொல்வீர்கள் ? அய்யகோ!