வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடகைத் தாய் முறையை வர்த்தகரீதியில் பயன்படுத்துவதற்கு இம்மசோதா தடைவிதிக்கிறது.
வளர்ந்து வரும் நவீன சூழலில் நிறைய தம்பதிகளுக்கு குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதன்காரணமாக இனிவரும் காலங்களில், இனிமேல் வாடகைத் தாய்க்கான தேவை அதிகமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தை இல்லாத தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது நடைமுறையில் உள்ளது. ஆனால், வாடகைத் தாய் முறை வர்த்தகரீதியாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, உலக அளவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று தரும் வர்த்தக மையமாக இந்தியா மாறி வருவதாகப் புகார் கூறப்படுகிறது.
வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்துவதற்கு முறையான சட்டங்கள் இல்லாததால், சில மருத்துவமனைகள் இந்த நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக வாடகைத் தாய் முறையை முறைப்படுத்தும் வகையில் வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா 2019-ஐ மத்திய அரசு மக்களவையில் நேற்று (ஜூலை 15) அறிமுகப்படுத்தியது.
சட்டப்படி திருமணமாகி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவடைந்த இந்திய தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெறலாம் எனவும் குழந்தைப் பெற்று தரும் வாடகைத் தாய் அந்தத் தம்பதிகளின் உறவினராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் எனவும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஒரு பெண் ஒரு முறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க வேண்டும். அவ்வாறு வாடகைத் தாயாக இருக்கும் பெண் திருமணமாகி ஏற்கனவே குழந்தை பெற்றிருக்க வேண்டும். வாடகைத் தாயாக இருக்கும் பெண் 25 முதல் 35 வயது உடையவராக இருக்க வேண்டும். இந்த முறையை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அளவில் வாடகைத் தாய் வாரியம் அமைக்கப்படும்.” என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடகைத் தாய் மூலம் பெறப்பட்ட குழந்தைகளைத் தம்பதிகள் எக்காரணம் கொண்டும் கைவிட்டுவிடக்கூடாது எனவும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.