வாரணாசி மக்களவை தொகுதியில் களம் இறங்கும் பிரதமர் மோடி, இன்று (ஏப்ரல் 26) வேட்புமனு தாக்கல் செய்தார்.
2019 மக்களவை தொகுதி நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில், மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் மிக மிக்கியமான மாநிலமாகப் பார்க்கப்படும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி. உத்தரப் பிரதேசம் வாரணாசி தொகுதிக்கு மே 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
வேட்புமனு தாக்கல் செய்யத் தொடங்கப்பட்ட நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்தபோது, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் உடனிருந்தனர். இன்று காலைக் காலபைரவர் கோவிலுக்குச் சென்று பூஜை செய்தபின்னர் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்துக் காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும், சமாஜ்வாடி சார்பில் ஷாலினி யாதவ் என்ற பெண் வேட்பாளரும் போட்டியிடுகிறார்கள்.